Thursday, April 17, 2014

என் அம்மாச்சியின் கவிதைகள் - அணிந்துரை மற்றும் முன்னுரை

                                      அணிந்துரை
கலைமாமணி  ஏர்வாடி எஸ். ராதகிருஷ்ணன், பொதுசெயலாளர், அனைத்து இந்தியத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.
சிறப்பாசிரியர், ‘கவிதை உறவு’ இலக்கிய மாத இதழ்

               உள்ளதைச் சொல்வது உரைநடையென்றால் உணர்ந்ததைச் சொல்வது கவிதை. உணரச் செய்வதும் கவிதைதான்.  உள்ளது வேறு;
உள்ளத்தில் உள்ளது வேறு  உள்ளத்து உள்ளதுதான் கவிதை. இதைத்தான்,
                ”உள்ளத்து உள்ளது கவிதை-இன்பம்
                 உருவெடுப்பது கவிதை”
என்று கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார். கவிதை இனிமையானது மட்டுமன்று இன்பம் பயப்பதும்கூட.

                 ’
                “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்கிற
மாக்கவி பாரதியின் பாடல்கள் அத்துணைக் கோடி இன்பத்துக்கும் மேலான
இன்பத்தை அளிக்கவல்லவை.

                 கால்நூற்றாண்டுக்கும்  மேலாகக் கவிதையொடும்
கவிஞர்களோடும் (கவிதை)  உறவு பாராட்டுகிற எனக்கு இவ்வின்பம் இறைவன் கொடுத்த வரமாயிருக்கிறது. அன்மையில் எனக்குக் கவிதையால் முதலில்
அறிமுகமாகியிருக்கிற கவிஞர் திருமதி தேவி ஜெகா  வளரத்துடிக்கும்  வளரும்
கவிஞர்.  கவிஞர்  தேவி ஜெகாவின் கவிதைகள் கவிதைக்கான வடிவ மரபை மீறியிருக்கலாம் . ஆனால் கவிதைக்கான எதிர்பார்ப்புக்கு அப்பால் போகவில்லை. வசன கவிதைகள் என்பதாய் வரவவேற்கத் தக்க வரிகளை இந்நுலெங்கும் நான் பார்க்கிறேன்..
”யாதுமாகி நின்றாய்” பாடலில்(பக்கம் 19) கவிஞர் தேவி ஜகா.
                  “யாதுமாகி நின்றாய் மனமே
                   யார் எது கேட்பினும் உனையே
                   யாதும் வருவதும் உன்னாலே
                   யாதும் வகுத்ததும் நீதானே….”
என்று வளர்கிற வரிகள் மனித மனத்தின் மாண்பினை உணர்த்துகின்றன. எல்லாவற்றிற்கும் மனமே ஆதாரம். “தீதும் நன்றும் பிறர்தரவாரா” என்கிற கணியன் பூங்குன்றனின் கவிதை வரிக்கு வலுவூட்டுகிற வரிகள் இவை.

             வாழ்க்கை என்பது ஒருவழிப்பயணம். இதில் பாதை நிரந்தரம். பயணம் என்பதும் வெவ்வேறு அனுபவங்களையும் நிலைகளையும் காண்கிறது. வழிப்போககன்(பக்கம் 22) என்ற கவிஞரின் வசன  வரிகளில் இக்கருதிற்குச் சற்று வெளிச்சம் தூவப்பட்டிருக்கிறது.

              சிங்காரச் சென்னைகூடக் கவிஞருக்குக் கவிதைப் பொருளாகியுள்ளது.

               “ சிங்காரச் சென்னை இது
                 சிலகாலம் சென்று பார்க்கையிலே
                 செல்லாத பாதைஇது எனச்
                 சென்றவர் மனம் தடுமாறச்
                 செப்பனிட்டார் பலவிதமாய்” (பக்கம் 26)
என்று விரிகிற வரிகளில் கவிஞரின் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. யாரும் செல்லாத செல்லமுடியாத பாதைகள் இப்போது செல்லும் வண்ணம் செப்பனிடப்பட்டுள்ளன என்பது சென்னை சிங்காரமானதை சொல்கிற வரிகளாகும்.

                  ” நாணிச் சிரிக்கும் பயிரைக் கண்டேன்
                    நான் அங்கு உழைப்பைக் கண்டேன் “  (பக்கம் 25 )
என்ற வரிகளில் கவிஞரின் பார்வை தெரிகிறது. உயர்ந்து நிற்கும் பயிரில் உழைப்பைப் போற்றுகிற உன்னதமான பார்வையைக் காட்டும்.

ஈந்துவக்கும் இனிய பண்பு எல்லோர்க்கும் வேண்டுவதை,

                    “ ஈதல் என்பது உயர்வாகும்
                      ஈயா நாளோ வீணாகும் “
என்ற வரிகளில் கவிஞர் உணர்த்துகிறார். இவ்வரிகளில் மட்டுமன்று: எல்லா வரிகளிலும் எல்லாக் கவிதைகளிலும் எளிமையும் எளிதில் புரிகிற பொருட்செறிவும் காணப்படுகிறது.
              பாடுபொருளாய் கவிஞருக்கு, இப்படி பல விஷயங்கள் வந்து கிடைத்து வரிகளாய் விரிந்துள்ளன. எளிமையாக இருக்கிறது, எளிதில் புரிந்துவிடுகிறது. எல்லோர்க்கும் தெரிந்ததுதான் என்பதால் இவற்றைப் பண்டிதர்கள் போற்றாமல் போகலாம். ஆனால் பாமரனுக்கும் போய்ச்சேருகிற வரிகள் என்பதால் புலர்கிற நாளெல்லாம் இவற்றை இந்தப் பூமிவரவேற்கும்.
              வளர முளைவிடுகிற இந்த விருட்சம் இப்போது செடிதான். இது வளர்ந்து வானோடு அளவளாவும் என்பதில் எனக்கு மாறாத உறுதியுண்டு. இவரையும் இவரது கவிதைகளையும் உற்சாகப்படுத்தினால் இதுவே உரமாகும் என்பதிலும், இவரிடமிருந்து இன்னும் பல கவிதைகள் தமிழுக்கு வரவாகும் என்பதிலும் எனக்கு வானளாவிய நம்பிக்கையுண்டு.
              கவிஞரை வாழ்த்துகிறேன். கவிஞரிடமிருந்து இன்னும் சிறந்த கவிதைகளை வரவேற்கிறேன். வளமார்ந்த தமிழ் இவராலும் வளருமென்கிற நம்பிக்கையில் இம் முயற்சியைப் பாராட்டி மகிழ்கிறேன்.

                                          எப்போதும் அன்புடன்
                              ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்.          

   
                                                 முன்னுரை
கவிதை என்பது படைப்பவரின் உள்ளத்து உனர்வுகளைக் கிளர
வைக்கும் உன்னதப்பணி. அவை படைப்பவருக்கு மன நிறைவைத் தருவதுடன், அதனைப் பருகுபவரின் உள்ளதையும் தொடவேண்டும்.

     இயற்கையை வர்ணித்தும், உயிரினங்களைப் பற்றி விளக்கியும், தெய்வங்களைப் போற்றியும், பஞ்சபூதங்களின் உயர்வை
எடுத்துரைத்தும், நம் குணநலன்கள் குறித்தும், கலைகளைப் போற்றியும், சுற்றுச்சூழல் காப்பது குறித்தும், பல பருவங்களை அனுபவித்தும், பல நாட்டை விவரித்தும், பல கவிதைகளை இங்குத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.

     எனது இந்தக் கவிதைப் படைக்கும் முதல் முயற்சி வெற்றியடையும் என நம்புகிறேன்.

      இந்த முயற்சிக்கு எனக்குப் பெரிதும் உதவிய என் கணவருக்கும், என் குடும்பதவருக்கும் திரு ப.ராமலிங்கம் அவர்களுக்கும், புலவர் வரதகோவிந்தராசன் அவர்களுக்கும், கலைமாமனி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் அவர்களுக்கும், செல்வவினயகா அச்சுக்கூட உரிமையாளர் திரு. துரைபண்டியன் அவர்களுக்கும் எனது நன்றி.
     என் பணித்தொடர தங்கள் அன்பான ஆதரவை விரும்பும்,

                                             தேவி ஜகா
                                               7/12/2000

No comments:

Post a Comment